‘கலை, கலாச்சாரம் மட்டுமின்றி, வாணிபத்துக்காகவும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கடல் கடந்து, தமிழர்கள் உலக நாடுகளில் வலம் வந்திருக்கின்றனர்.தற்போதும், தமிழர்கள், கடல் கடந்து ஏற்றுமதி வணிகத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வருகின்றனர்.
இதுபோன்ற வர்த்தக நோக்கம் அல்லாமல், முதலீடு செய்வதற்கு, வெளிநாடுகளை அணுகுவதற்கான வழிகளை இந்தியா திறந்துவிட்டு, அதை தாராளமயமாக்கி உள்ளது.‘எல்.ஆர்.எஸ்.,’ (Liberalised Remittance Scheme) என்று சொல்லப்படும் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டம், இந்தியாவில், 2004ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியர்கள், வெளிநாடுகளில் பங்குகள் மற்றும் சொத்துக்கள் வாங்குவதை அனுமதிப்பதற்காகவே, 2004ல் ‘எல்.ஆர்.எஸ்.,’ அறிமுகப்படுத்தப்பட்டது.ரிசர்வ் வங்கி, 2015ல், ‘எல்.ஆர்.எஸ்.,’ கொள்கைகளில் நிறைய தளர்வுகள் அறிவித்து, பண பரிவர்த்தனையை தாராளமாக்கியது.
அதற்கு முன் வரை, ஒரு தனிநபருக்கு, ஒரு நிதியாண்டுக்கு, 1,25,000 யு.எஸ். டாலர் என்று இருந்த உச்ச வரம்பு, 2,50,000 யு.எஸ்., டாலர் என்று உயர்த்தப்பட்டது.அதாவது, ஒரு இந்தியர், ஒரு நிதியாண்டில், (தற்போதைய) இந்திய மதிப்பில், ரூ.1.83 கோடி வரை, வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம். அல்லது அந்த அளவுக்கான பணத்தை பரிமாற்றம் செய்யலாம். இதை ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெறாமலேயே, அங்கீகரிக்கப்பட்டுள்ள வங்கிகள் மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும்.
எதற்கு பயன்படுத்தலாம்?
*வெளிநாடுகளில் வசிக்கும் நெருங்கிய உறவினர்களை பராமரிப்பதற்கு பணம் அனுப்பலாம்.l உறவினர்களுக்கு கடன் வழங்குவதற்கு செலவழிக்கலாம்.l வெளிநாட்டில் வசிக்கும் உறவினர் மருத்துவ செலவிற்கு வழங்கலாம்.
*வெளிநாடுகளில் பங்குகள் வாங்குவதற்கு பயன்படுத்தலாம்.
* வெளிநாடுகளில் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு நிதி பரிவர்த்தனை செய்யலாம்.
*வெளிநாட்டு (யு.எஸ்.,) டாலர்களில் முதலீடு செய்வதற்கு செலவழிக்கலாம்.
*வெளிநாடுகளில் வீடு, நிலம் வாங்குவதற்கு.
*அனுமதிக்கப்பட்ட நன்கொடைகள் வழங்குவதற்கு.
* வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கு.
*வெளிநாட்டில் வேலைக்குச் செல்வதற்கு.
*வெளிநாட்டு சுற்றுலா பயணங்களுக்கு.இப்படி பல்வேறு வகை பயன்பாட்டிற்கு, எல்.ஆர்.எஸ். வாயிலாக, எந்த முன் அனுமதியும் இன்றி அதிகபட்சமாக 2,50,000 டாலர்கள் பணம் அனுப்பலாம்.
எப்படி அனுமதிக்கிறார்கள்?
எந்த ஒரு இந்திய குடிமகனும், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல், ‘எல்.ஆர்.எஸ்.,’ வாயிலாக, வெளிநாட்டுக்கு பணம் அனுப்பி, அங்குள்ள வங்கிகளில், அன்னிய செலாவணி கணக்கு தொடங்கலாம். மேற்கூறிய காரணங்களுக்காக செலவழிக்கலாம். ஆனால், அது அனுமதிக்கப்பட்ட அளவான, 2,50,000 யு.எஸ்., டாலருக்குள் இருந்தால் எந்த கேள்வியும் இல்லை. அந்த வரையறை தாண்டும்போது, அமலாக்கத்துறையின் விசாரணையை சந்திக்க நேரலாம். நேர்மையான முதலீடு, வியாபாரத்துக்கு, எப்போதும், எந்த சட்டச் சிக்கலும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.தற்போது, எல்.ஆர்.எஸ்., வாயிலான பண பரிவர்த்தனை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. பணம் அனுப்பும் நடவடிக்கைகளுக்கு, குறிப்பிட்ட நபரின், பான் நம்பர் குறிப்பிடவேண்டும். அடையாள ஆவணம் தேவைப்படும். எவ்வளவு தொகை, யாருக்கு, எந்த பயன்பாட்டுக்கு அனுப்புகிறீர்கள் என்று குறிப்பிட்டு, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக அனுப்பி விடலாம். உச்சபட்ச அளவு 2,50,000 டாலர். இதில் நடப்பு கணக்கு, மூலதன கணக்கு, வெளிநாடு செல்லும் செலவு என்று எல்லாமும் இதில் அடங்கும்.
ஏன் ஆர்வம்?
யு.எஸ்., டாலர் மதிப்பு அதிகரித்து வரும் நேரங்களில், இதுபோன்று டாலரில், பணத்தை முதலீடு செய்வது வாடிக்கையான ஒன்று. தற்போது டாலர் மதிப்பு அதிகரிக்கும் என்ற போக்கு காணப்படுவதால், டாலரில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.வெளிநாடுகளில் உதாரணமாக, லண்டன், புளோரிடா போன்ற உலகப்பெரும் இடங்களில் சொத்து வாங்கிப்போடுவது, ஒரு வணிக நாகரீகமாகி வருகிறது. அங்கே, உங்கள் சொத்துக்களை வாடகைக்கு விட்டு பராமரிக்க, நம்பத்தகுந்த ஏஜென்சிகள் கிடைப்பதால், இந்தியாவிலிருந்து பலர் உலக நாடுகள் பலவற்றில் முதலீடு செய்து வருகின்றனர்.
ஏன் அனுப்புறாங்க?
உள்நாட்டிலேயே சேமிக்க, முதலீடு செய்ய, பாதுகாப்பாக பல வாய்ப்புகள் இருக்கும்போது, தங்கள் பணத்தை ஏன் வெளிநாடுகளில், டாலர்கள் மீது கொட்டவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. வட்டி கணக்குப்பார்த்தால் பெரிய வருமானம் இருக்காது. ஆனால், மார்ச் மாதம் முதல் டாலர் விலை ரூ.73க்கு மேல் சென்றபோது, வெளிநாட்டு முதலீடு மீது பலருக்கும் ஆசை மேலோங்கியது. பலர், ஆப்பிள், ஆல்பாபெட் போன்ற நிறுவன பங்குகள் வாங்கினர்
சிக்கியவர்களும் உண்டு
கடந்த, 2015 பிப்.,ல், அப்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், ரூபாய் மதிப்பைக் குறைத்து, வெளிநாட்டு முதலீடுகளுக்கு வரம்புகளை உயர்த்திய போது, பல பெரும் வர்த்தகர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் வைர வணிகர்கள், நிதியாண்டு நிறைவடையும் முன் பங்குகள் மற்றும் சொத்துக்கள் வாங்க, வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பி குவித்தனர். அதில் வரம்பு மீறிய பலர், விசாரணை வளையத்துக்குள்ளும் வந் தார்கள்.
எது எவ்வளவு?
சமீபகாலமாக, எல்.ஆர்.எஸ்.,ன் கீழ், பயணம் மற்றும் படிப்புக்காக வெளிநாடு செல்வது குறைந்துவிட்டது. ஆனாலும், நெருங்கிய உறவினர்களை பராமரிப்பதற்காக, 344 மில்லியன் டாலர்கள் சென்றிருக்கிறது. இது, இந்த ஆண்டு மார்ச் கணக்கு. மேலும், பரிசாக அனுப்புவது, 16 சதவீதம் அதிகரித்திருந்தது. வெளிநாட்டு படிப்பு, 7 சதவீதமும், பயணங்கள், 28 சதவீதமும் குறைந்துவிட்டன. எல்.ஆர்.எஸ்.,ன் கீழ் பணம் அனுப்புவது, கடந்த நிதியாண்டில், மொத்தம், 36 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது.
எவ்வளவு மதிப்பு?
‘எல்.ஆர்.எஸ்.,’ வாயிலாக பணம் அனுப்புவது, இந்த ஆண்டு மார்ச்சில் தான் சாதனை அளவை எட்டியது என்கிறார்கள். அதன்படி, மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில், 18.75 பில்லியன் டாலர் மதிப்புக்கு, இந்தியர்கள் வெளிநாட்டுக்கு பணம் அனுப்பியுள்ளனர்.
பாலிவுட் பாஸ்ட்
இந்தியாவின் வட மாநில செல்வந்தர்கள், தங்கள் சேமிப்பின் ஒரு பகுதியை வெளிநாடுகளில், டாலர்களில் பாதுகாப்பாக முதலீடு செய்கிறார்கள். சொத்துக்களாகவும், பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளாகவும் வாங்கி குவிக்கிறார்கள். இதில், பாலிவுட் பிரபலங்கள் அடக்கம்.
ஜி.கார்த்திகேயன்
வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: Karthi@gkmtax.com