“Are my deposits safe? Should we be prepared for the FSDR Bill?”
A detailed analysis of the proposed Financial Sector Development and Regulation Bill, and implications for investors by CA G Karthikeyan FCA in Dinamalar dated October 27, 2020.
கடந்த இரு வாரங்களில், எனக்கு வந்த அலைபேசிகளில், ‘பேங்க்ல போட்டு வச்சிருக்கிற நம்ம டெபாசிட் பத்திரமா இருங்குங்களா?. இல்ல, அதுக்கும் ஏதாவது ‘சிக்கல் வர வாய்ப்பிருக்கா?. வாட்ஸ் அப்பில் வித்தியாசமான செய்தி பார்க்கிறோம்’ என்ற விசாரிப்புகள் தான் அதிகம்.
வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் டெபாசிட்கள் மீது, மத்திய அரசு ஏதேனும் புதிய சட்டம் அமல்படுத்த உள்ளதா என்பதே, அவர்களின் அதிகபட்ச சந்தேகம்.ஆனால், அதுபோன்ற சூழல், தற்போது இல்லை என்பதே உண்மை. ஆனால், வராக்கடன், நிதி முறைகேடு, நிர்வாக சீர்கேடு போன்ற காரணங்களால் சரிவை சந்திக்கும், ரிசர்வ் வங்கியின் கீழ் வரும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை மீட்பது, அதன் பிரச்னைகளை சரிசெய்வது குறித்த நடவடிக்கைகளுக்கான புதிய மசோதா குறித்து கசியும் தகவல்களே, இப்படியான கேள்விகளை எழுப்பி வருகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரில், ‘நிதி அமைப்புகள் மேம்பாடு மற்றும் ஒழுங்கமைவு (FSDR — Financial Sector Development and Regulation Bill) மசோதா’, பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, இது, கம்பெனிகளுக்கு திவால் சட்டம் இருப்பது போல, நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு FSDR என்று வைத்துக்கொள்ளலாம். பொதுவாக, நிதி நிறுவனங்கள், வங்கிகள் நிதி சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது, அரசாங்கத்திடம் இருக்கும், பொது மக்களின் வரிப்பணத்தை வைத்து, வங்கிகளில் மறு மூலதனம் செய்தல், சிரமத்தில் இருக்கும் வங்கியை மற்ற வங்கியோடு இணைத்தல் போன்ற வகைகளில், சிக்கல்கள் தீர்க்கப்பட்டு வந்தன. அந்த நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பெயில் -இன்
தொடர்ந்து, நிதிச் சிக்கல் நிதி நிறுவனங்கள், வங்கிகளை காப்பாற்ற, 2017ல், நிதித்தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீடு (FRDI — Financial Resolution and Deposit Insurance ) மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்ற, ‘Bail-In’ (உள்ளிருந்து) என்ற அம்சத்துக்கு, டெபாசிட்தாரர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
அதாவது, நிதிச்சிக்கல் எதிர்கொள்ளும் நிதி நிறுவனம், வங்கியை காப்பாற்றும் பொறுப்பும், தீர்வும் உள்ளிருந்து (Bail-in) வர வேண்டும் என்பதே அதன் நோக்கம்.சுருக்கமாக சொல்வதென்றால், நிதிநிலை மோசமான நிதி நிறுவனம், வங்கியை மீட்க, அரசிடம் இருக்கும் மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்துவதற்கு பதில், டெபாசிட்தாரர்கள் பணத்தை பயன்படுத்தியே, குறிப்பிட்ட வங்கியை மீட்பது. தனது வங்கி விழுந்துவிடாமல் இருந்தால் தானே டெபாசிட்தாரர் மீள முடியும் என்பதே அதன் கணக்கு.
அதன்படி, டெபாசிட், பாண்ட் போன்றவற்றின் முதிர்ச்சி தேதியை, வங்கிகள் தாமாக நீட்டிக்க முடியும். முதிர்வு தொகையை பல்வேறு காலகட்டங்களில் திருப்பித்தரலாம். வங்கிகள் தரவேண்டிய தொகையை ரத்து செய்யலாம் அல்லது டெபாசிட் முதிர்வு திருப்பித்தருவதற்கு பதில், வங்கி பங்குகளாக மாற்றி அறிவிக்கலாம். இந்த அம்சங்களுக்கு அப்போதே மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. அதனால், மசோதா திரும்ப பெறப்பட்டது. ‘Bail-In’ என்ற அம்சத்தை நீக்கிவிட்டு, புதிய திருத்தங்களுடன் புதிய மசோதா அறிமுகம் செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.
புது மசோதா
அதன்பின், புதிய பெயரில், அதாவது, ‘நிதி அமைப்புகள் மேம்பாடு மற்றும் ஒழுங்கமைவு மசோதா’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், ஆலோசனைகள் தீவிரமாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இருந்தபோதும், மத்திய அரசு, இன்னும் உறுதியாக எதையும் அறிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில்தான், வரும் நாட்களில், ‘எப்.எஸ்.டி.ஆர்.,’ மசோதா தாக்கலாகலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.தற்போது அறிமுகமாக இருக்கும் எப்.எஸ்.டி.ஆர்., மசோதாவின்படி, ‘ரெசல்யூசன் அத்தாரிட்டி’ (தீர்வு அமைப்பு) என்ற அரசு சார்ந்த தனி அமைப்பு அமைய இருக்க வாய்ப்புள்ளது. அதன் பணி, நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள், கமர்ஷியல் வங்கிகள், தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் ‘நிதி ஆரோக்கியத்தை’ தொடர்ந்து கண்காணிக்கும்.
எது மோசமான நிதி நிலைமையை நோக்கி நகர்கிறது. எதை காப்பாற்றிவிட முடியும். எதை எதனுடன் இணைக்க முடியும் என்று ‘ரெசல்யூசன் அத்தாரிட்டி’ முடிவெடுத்து, நடவடிக்கையில் இறங்கி பிரச்னையை தீர்க்கும். இதனால் பல லட்சம் முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள், சேமிப்பாளர்கள் கொண்ட ஒரு நிதி நிறுவனம் தப்பிப்பிழைக்க வழி உண்டு.
பொறுப்பு ரத்து
அப்படி அது எடுக்கும் பல நடவடிக்கைகளில் ஒன்று, ‘Liability cancel’ அல்லது ‘Liability modify’ என்பதாகும். அதாவது, பாதிக்கப்பட்ட நிதி நிறுவனத்தின் பொறுப்புகளை ரத்து செய்வது அல்லது மாற்றி அமைப்பது. இது எதற்காகவென்றால், குறிப்பிட்ட நிதி நிறுவனம், வங்கி, தனது டெபாசிட்தாரர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, டெபாசிட் பணத்தை முழுமையாகவோ, பகுதியாகவோ திரும்பத்தர வேண்டியதில்லை. அதை முதிர்வு காலத்துக்கு பதில் வேறு தேதியில் தரலாம். அல்லது வேறு வகையில் தரலாம். அல்லது குறிப்பிட்ட உச்சவரம்பில் எடுத்துக்கொள்ள சொல்லலாம். இது மறுபடியும், ‘Bail-In’ உட்பிரிவை நினைவுபடுத்துவதாகவே உள்ளது என்கிறார்கள்.டெபாசிட்தாரர்களுக்கு ஏற்கனவே இருந்த ரூ.1 லட்சம் வரம்பு, கடந்த பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பொறுத்திருப்போம்
புது மசோதாவின் முழு விபரங்கள் இன்னும் முழுமையாக தெரியவரவில்லை. ஆனால், அதற்கு முன்பே, வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்கள், வங்கிகளின் பங்குகளை வைத்து இருப்பவர்களிடம், அது பற்றிய விவாதங்கள் தொடங்கி விட்டன. மீடியாக்கள் மோப்பம் பிடிப்பதால், ‘அரசல் புரசல்’ தகவல்கள், இப்போது உலா வருகின்றன.மசோதாவின் அம்சங்கள் முழுமையாக வரும் வரை பொறுத்திருப்போம். பிரச்னைக்குரிய நிதி நிறுவனங்கள், வங்கிகள் தவிர மற்றவர்கள் பயப்பட ஏதுமில்லை. அப்படி, புதிய ‘எப்.எஸ்.டி.ஆர்.,’ மசோதா கொண்டு வரவேண்டிய அவசர அவசியம் என்ன? அதன் சாதக, பாதக அம்சங்கள் என்ன என்பது குறித்தெல்லாம், அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
எப்.எஸ்.டி.ஆர்., அம்சங்கள்
* நிதி நெருக்கடிக்குள்ளாகும் நிறுவனத்திற்கு ஒரு ‘ஆர்.ஏ..’ (Resolution Authority) நியமிக்கப்படுவார். அவர் பிரச்னைக்குரிய நிதிநிறுவனத்தின் சொத்துக்கள், பொறுப்புகளின் மார்க்கெட்வேல்யூ பொறுத்து கடுமையான முடிவுகளை தீர்மானிப்பார்.
* பிரச்னைக்குரிய நிறுவனத்தை, வேறு நிறுவனத்துடன் இணைக்க முடிவெடுக்கலாம். மறுசீரமைக்கலாம். திவால் முடிவுக்கும் செல்லலாம்.
*சொத்துக்களை கைப்பற்றி விற்று, பொறுப்புக்களை, பாதிப்பு அளவிற்கு ஏற்ப தீர்க்கலாம்.
*டெபாசிட்தாரர்கள் எவ்வளவு பணத்தை திரும்ப எடுக்கலாம் என தீர்மானிக்கலாம்.
*புதிய மசோதாவில், வங்கிகள் மட்டுமல்லாமல், இன்சூரன்ஸ், நான் பேங்கிங் இன்டிடியூஷன், பேமண்ட் பேங்க் உட்பட பலவகை நிதி நிறுவனங்களும் கொண்டு வரப்படலாம் எனத்தெரிகிறது.
ஜி.கார்த்திகேயன்
வாசக வணிகர்களே உங்களின் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: Karthi@gmktax.com